தலைப்பு- இது சத்தியம்( அப்பாவிற்கு மடல்)
எழுதியவர்- மீனாட்சி ராமசாமி
அன்புள்ள அப்பா!
என்னை நீர் மடியில் வைத்து கொஞ்சவில்லை ...
மனதில் வைத்து மகிழ்ந்தவர்..
உனக்கு அழகல்ல என்றோ, அன்பால் எமை அரவணைத்தாய்?
ஏழு வயதில் எனக்குள் ஓர் போராட்டம்...
பள்ளியோ என்னை சுட்டது நெருப்பு சுள்ளியாய்... விருப்பமில்லா படிப்பு ...
விவரம் புரியவில்லை எனக்கு ...
"இது சத்தியம்! இது சத்தியம்" என்றே நான் போராடினேன்...
சத்தியத்தின் அர்த்தம் தெரியுமா அவ்வயதில்?? "பள்ளிக்கு அழைத்து சென்றால் வீழ்வேன் தண்டவாளத்தில்" என்றேன் ...
தந்தையே நீர் தளரவில்லை....
ரயில் பாதையோ பள்ளிக்கருகில் ( மாம்பல ஸ்டேஷன்) தாரை தாரையாய் கண்ணீர் விட்டாள் என் தமக்கை...
நான் கதறுவது உந்தன் காதுக்களுக்கு கேட்கலையோ?எனக்குள் எழுந்தது ஓர் சந்தேகம்...
மீண்டும் சத்தியத்தை கையில் எடுத்தேன்....
"பள்ளிக்கு அனுப்பினால் ஓடும் காரிலிருந்தே குதித்திடுவேன்...இது சத்தியம்" என்றே உமை மிரட்டினேன்..
அசரவில்லை நீர்..
ஓடும் காரோ நிற்கவில்லை....
கோபத்தில் நான் என் கால்களில் ஏற்பட்டிருந்த காயத்தை மேலும் புண்ணாக்கி காட்டினேன்..
துடிக்கவில்லை நீர்...
எத்தனை அட்டகாசம் அந்த வயதில்...
ஆனால் நீங்கள் என்னை அடிக்கவில்லை ....
அமைதி காத்தீர்....
இதுவே இன்றைய தகப்பனாய் இருந்திருந்தால்? நினைக்கவே என் உடல் நடுங்குகிறது ..
..
படகுப் போன்ற நம் பிளைமவுத் காரில் இறங்கிய உம்மை சூழ்ந்த மாணவர்கள்"நீங்க நடிகரா?" என கேட்டு நச்சரித்தனர் ..காரணம் பெரிதல்ல ...சிவந்த நிறமுடைய உன் அழகிய முகமோ ...கோபத்தில் மேலும் தக்காளிப் பழமாய் சிவந்தது தான் ...
இவை அனைத்தும் பசுமரத்தாணியாய் இன்றும் என் நினைவிலே....
என் மேலிருந்த பயத்தை அகற்றி விட்டே,
அக்கறையில் என்னை பள்ளியிலே தள்ளிவிட்டு சென்றீரே ....
அதனால் தான் இன்று நானும் எழுதிக்கொண்டு இருக்கிறேன்... உங்களின் நிழலில்... இதுவே சத்தியம் ...நன்றி அப்பா..
இப்படிக்கு ,
மீனாட்சி ராமசாமி
( என் தந்தைக்கு சமர்பிக்கும் மடல்)